கூட்டுறவு வங்கி கடன் கிடைக்காததால் கலைஞர் கனவு இல்லம் பணியில் தொய்வு
மேட்டுப்பாளையம்; கூட்டுறவு வங்கி கடன் கிடைக்காததால், நுாற்றுக்கும் மேற்பட்ட, கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்டி முடிக்காமல் பாதியில் நின்றுள்ளன.தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு, தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள் ஆகியவை கட்டுவதற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்தது. கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தை அறிவித்து, ஒவ்வொரு வீட்டிற்கும், 3.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்க, எவ்வித பிணையம் இல்லாமல், மத்திய கூட்டுறவு வங்கியில், ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்கப்படும், என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், உள்ள, 17 ஊராட்சிகளில், 300-க்கும் மேற்பட்ட கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில ஊராட்சிகளில், ரூப் கான்கிரீட் போட்ட நிலையில், அதற்கு மேல் கட்டுவதற்கு பணம் இல்லாததால், பயனாளிகள் வீடுகள் கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்தியுள்ளனர்.இது குறித்து பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் கூறியதாவது:வீடு கட்டுவதற்கு எங்களை தேர்வு செய்தவுடன், முன் பணம் போட்டு பேஸ் மட்டும் கட்டினோம். அதை பார்த்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அதற்கு உரிய தொகையை எங்களுடைய வங்கிக் கணக்கு அனுப்பினர். அதைத் தொடர்ந்து லிண்டல் மற்றும் ரூப் கான்கிரீட் போட்டவுடன் இரண்டு மற்றும் மூன்றாவது தவணைத் தொகையை வழங்கினர். தற்போது வரை கட்டியுள்ள வீடுகளை, முழுமையாக கட்டி முடிக்க, பணம் தேவைப்படுகிறது. தமிழக அரசு அறிவித்த படி, மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் தொகை வேண்டி, வங்கி கணக்கு துவக்கியுள்ளோம். ஒரு மாதத்திற்கு மேலாகியும் எவ்வித தகவலும் வங்கியில் இருந்து தெரிவிக்காமலும், கடன் தொகை வழங்காமலும் அதிகாரிகள் உள்ளனர். இதனால் வீடுகள் கட்டுமான பணிகள் பாதியில் நின்றுள்ளன. நாங்கள் குடியிருந்த வீட்டையும் இடித்துவிட்டு, தற்போது சிறிய சாளை அமைத்து அதில் குடியிருந்து வருகிறோம். எனவே மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் தொகை கிடைக்க, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு மக்கள் கூறினர்.இது குறித்து மேட்டுப்பாளையம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளரிடம் கேட்டபோது, ''கடந்த ஒரு மாதமாக பயனாளிகள் வங்கி கணக்குகளை துவக்கி வருகின்றனர். தினமும், 10, 15 பேர் புதிதாக வங்கி கணக்கு துவக்குகின்றனர். அவர்களின் வீடுகள் எவ்வளவு கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு செய்த பின் அவர்களுக்கு கடன் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.