தேர்தல் வாக்குறுதி என்னாச்சு: கேள்வி எழுப்பும் நுாலகர்கள்
- நமது நிருபர் -தமிழக நுாலகத்துறையின் கீழ், 1,915 ஊர்ப்புற நுாலகங்கள் உள்ளன. இங்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் நுாலகர்கள் பணியாற்றி வருகின்றனர். 14 ஆண்டுகளாக காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். அமைப்பின் மாநில துணைத்தலைவர் நாகராஜன் கூறியதாவது: 2012 முதல் இன்று வரை, 1,006 நுாலகர்கள், சிறப்பு காலமுறை ஊதியத்தில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். அரசின் எந்த பலனும் கிடைப்பதில்லை. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், ஊர்ப்புற நுாலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என, இன்றைய முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார். இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்தால்தான், அரசின் ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, பணிக்கொடை, பணியாளர் இறந்தால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்கும். தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.