யானை துரத்தி காயம்; வாலிபர் உயிரிழப்பு
தொண்டாமுத்துார்; நரசீபுரத்தில், ஒற்றைக்காட்டு யானை துரத்தியபோது விழுந்து படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.பூலுவபட்டி, சின்னதம்பிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் அபிமன்யூ,33. பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.நேற்றுமுன்தினம் இரவு, தனது நண்பர் சரவணன் என்பவருடன், நரசீபுரம், வைதேகி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி அருகே உள்ள தோட்டத்தில் தங்குவதற்காக, இருவரும் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக, ஒற்றைக்காட்டு யானை சாலையை கடக்க வந்துள்ளது. இவ்விருவரையும் கண்ட ஒற்றைக்காட்டு யானை துரத்தியுள்ளது. அப்போது, சரவணன் ஒருபுறம் தப்பி ஓடிவிட, மறுபுறம் சுரேஷ் அபிமன்யூவை காட்டு யானை தொடர்ந்து துரத்தி சென்றது.சரவணன் சென்று பார்த்தபோது, அபிமன்யூ, தலை, கண் இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, சுரேஷ் அபிமன்யூவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சுரேஷ் அபிமன்யூ உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாரா அல்லது யானை துரத்திய போது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது பிரேத பரிசோதனை செய்த பின்பே தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.