மேலும் செய்திகள்
இடிந்து விழும் நிலையில் நுாலக கட்டடம்
09-Apr-2025
கோவை, ; மாவட்ட மைய நுாலகத்துக்கு வரும் வாசகர்கள், மதிய நேரத்தில் உணவு சாப்பிட இடம் இல்லாமல், கழிப்பறை அருகில் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் ரோட்டில், கோவை மாவட்ட மைய நுாலகம் செயல்படுகிறது. இங்கும் தினமும், 500க்கும் மேற்பட்ட வாசகர்கள் படிக்க வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக, போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்களின் வருகை அதிகரித்துள்ளது. நீட் மற்றும் மற்றும் ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களும் வருகின்றனர். காலையில் வரும் வாசகர்கள், மாலை 6:00 மணி வரை நுாலகத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர்.மதிய நேரத்துக்கு வீட்டில் இருந்து, உணவு கொண்டு வருபவர்கள், அமர்ந்து சாப்பிட அறை இல்லாததால், நுாலக வளாகத்தில் உள்ள மரத்தடியிலும், நுாலக கட்டட நிழலிலும் தரையில் அமர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். சிலர் கழிவறைக்கு எதிரே உள்ள சிமென்ட் தரையில் அமர்ந்து, உணவு சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நுாலக வாசகர்கள் சிலர் கூறுகையில், 'மதிய உணவு சாப்பிட தனியாக ஒரு அறை வேண்டும் என, கோரிக்கை வைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த ஆண்டு அந்த கோரிக்கையை ஏற்று, ஒரு அறை கட்டும் பணி துவங்கப்பட்டது. அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்தால் தரையில் அமர்ந்து சாப்பிட முடியாது. உணவு அறையை விரைவாக கட்டிக்கொடுக்க வேண்டும்'' என்றனர்.இது குறித்து, கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலர் ராஜேந்திரனிடம் (பொறுப்பு) கேட்டதற்கு, ''கோவை மாவட்ட மைய நுாலகத்தை, 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. வாசகர்களின் தேவையை அறிந்து பல வசதிகள் செய்து வருகிறோம். வாசகர்கள் 25 பேர் அமர்ந்து மதிய உணவு சாப்பிட வசதியாக, தனி அறை கட்டப்பட்டு வருகிறது. இப்போது டைல்ஸ் பதிக்கும் பணி நடக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் பணி முடிந்து விடும். வாசகர்கள் சிரமம் இல்லாமல் இங்கு அமர்ந்து உணவு சாப்பிடலாம்,'' என்றார்.
09-Apr-2025