உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு

சிதம்பரம், : உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய, தமிழகத்தை சேர்ந்த 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களுடன் மொபைல் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தைரியமாக இருங்கள். உங்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன' என்று ஆறுதல் கூறினார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம், 16 கால் மண்டபத் தெருவை சேர்ந்தவர் கனகராஜ்; ரயில்வே அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தலைமையில் கைலாஷ் ஆன்மிக சுற்றுலாவுக்கு, கடந்த 1ம் தேதி சிதம்பரத்தில் இருந்து 28 பேர் புறப்பட்டனர். சிதம்பரத்தில் இருந்து சென்னை வழியாக டில்லி சென்ற இக்குழுவினருடன், கோவையை சேர்ந்த இருவர் 3ம் தேதி இணைந்து கொண்டனர்.அங்கிருந்து 30 பேரும், 4ம் தேதி காத்தகோடம் சென்றனர். அங்கிருந்து டார்ஜிலா வழியாக ஆதிகைலாஷ் சென்றனர். அங்கு தரிசனம் முடிந்து திரும்பும்போது, 20 கி.மீ., தொலைவில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் 30 பேரும், தாவகட் என்ற பகுதியில் சிக்கிக் கொண்டனர். அதே சமயம் அவர்கள் சென்ற வாகனத்திலும் டீசல் தீர்ந்தது. செய்வதறியாமல் திகைத்த அவர்கள், புத்தி என்ற பகுதியில் தங்கினர். மின்சாரம் இல்லாமல், மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் நான்கு நாட்களாக வெளியே வரமுடியமல் சிக்கிய தகவல் அவர்களின் உறவினர்களுக்கு தெரிந்தது. அதையடுத்து, பக்தர்களின் உறவினர்கள், அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து முறையிட்டனர். அமைச்சரின் நடவடிக்கையால், கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பக்தர்கள் சிக்கியுள்ள பகுதியின் கலெக்டரை தொடர்பு கொண்டார். அதைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் மந்திக்சிங் அனைவரையும் மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். இத்தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை மீட்பு பணிகள் துவங்கியது. முன்னதாக அவர்கள் தங்கியிருந்த இடத்தில் தயார் நிலையில் இருக்குமாறு, தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 10:30 மணிக்கு ஹெலிகாப்டருடன் புத்தி பகுதிக்கு சென்ற மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.முதற்கட்டமாக பராசக்தி, 78; பார்வதி, 70; மலர், 54; கோமதி, 56; அலமேலு கிருஷ்ணா, 73, ஆகிய 5 பேரும், ஹெலிகாப்டர் மூலம் டார்ஜிலாவிற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு முறையும் 5 பேர் வீதம் 30 பேரும் மீட்கப்பட்டனர். மீட்பு பணி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது. மீட்கப்பட்ட அனைவருக்கும், டார்ஜிலாவில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. அதன் பின், அங்கிருந்து புறப்பட்டு, டில்லி வந்தடைந்தனர். அங்கிருந்து இன்று மதியம், சென்னை வருகின்றனர். பின், சொந்த ஊர் வருவார்கள். ஆதி கைலாஷிற்கு ஆன்மிக சுற்றுலா சென்று நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து, அவர்களின் உறவினர்கள் நிம்மதியடைந்தனர்.

கடைசியில் வந்த கனகராஜ்

ஆன்மிக பயணத்திற்கு அழைத்து சென்ற ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி கனகராஜ், மீட்புக்கு வந்த ஹெலிகாப்டரில் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு, கடைசியாக வந்துள்ளார். உடன் சென்ற அனைவரும், அவருக்கு நன்றி தெரிவித்தனர். மீட்கப்பட்ட பக்தர்கள் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, மின்சாரம் இல்லாததால், அனைவரின் மொபைல் போன்களும் சுவிட்ச் ஆப் ஆனது. இதனால், வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் போனது. இதனால், என்ன செய்வதென தெரியாமல் தவிக்க வேண்டியதாயிற்று, இந்நிலையில், தாவகட் என்ற இடத்தில் மிலிட்டரி கேம்ப்பில் இருந்த வீரர்களின் உதவியுடன் உறவினர்களுக்கு தாங்கள் பத்திரமாக உள்ளதாக தகவல் தெரிவித்த பிறகே நிம்மதியடைந்தோம் என, பதற்றத்துடன் கூறினார்.

திக் திக். .. நாட்கள்

--------ஒவ்வொரு நாளும் திக் திக் என நாட்கள் நகர்ந்தது. பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வு இருந்தாலும், எந்த பக்கத்திலும் செல்வதற்கு சாலை இல்லாததால் அச்சத்துடன் இருந்தோம். நிலச்சரிவு பயத்திலேயே பயணம் மேற்கொண்டோம். இன்று (நேற்று) காலை தான், முதல் பயணமாக நாங்கள் 5 பேர் மீட்கப்பட்டோம். ஹெலிகாப்டர் மூலம், புறப்பட்ட இடமான, டார்ஜிலாவிற்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, டில்லி அனுப்ப உள்ளனர். மீட்பு குழுவிற்கு நன்றி.- அலமேலு ,சிதம்பரம்.எங்களை மீட்டு அழைத்து வந்த ராணுவத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சர் பன்னீர்செல்வம், மற்றும் கலெக்டருக்கு நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். எங்களை காப்பாற்றி அழைத்து வந்த உத்தரகாண்ட் மற்றும் டில்லி அதிகாரிகளுக்கு நன்றி. நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம். முதலின் பெண்களை பத்திரமாக அனுப்பி வைத்து, இறுதியாக நாங்கள் 5 பேர் வந்து சேர்ந்தோம். தற்போது டார்ஜிலா பகுதியில் இருந்து டில்லி புறப்பட உள்ளோம். டில்லியில் இருந்து சென்னை வந்தடைவோம்.கனகராஜ், சிதம்பரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !