சாப்பாடு அறையை பூட்டுங்கள் அமைச்சர் டென்ஷன்
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில், கடலுார் லோக்சபா தொகுதியில், காங்., விஷ்ணுபிரசாத் வெற்றிக்கு உழைத்த தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் சமீபத்தில் நடந்தது. கூட்டம் காலை 10:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டதால், தி.மு.க., காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் காலையிலேயே வந்திருந்தனர். ஆனால், பகல் 12:10 மணிக்கு, தாமதமாக துவங்கியது.முதலில் விஷ்ணுபிரசாத் எம்.பி., தேர்தல் பணியாற்றிய கூட்டணி கட்சியினர் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவர் பேசி முடித்ததும், அமைச்சர் கணேசன் பேச ஆயத்தமானார்.அதற்குள், பிரியாணி வாசனை மூக்கை துளைக்க, அருகில் இருந்த சாப்பாடு கூடத்திற்குள் கட்சியினர் ஒருவர் பின் ஒருவராக உள்ளே செல்ல, சிறிது நேரத்தில் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர்.கூட்டம் ஏற்பாடு செய்த முக்கிய நிர்வாகிகள் தடுத்தும் கட்சியினர் கேட்காமல் சாப்பிட சென்றனர். இதனால் டென்ஷன் ஆன அமைச்சர் கணேசன், கூட்டம் முடிந்தவுடன் அனைவரும் சாப்பிட செல்லலாமே. அதுவரை அமருங்கள் என்றார். மீறியும் கட்சியினர் சாப்பிட சென்றதால், 'சாப்பாடு அறையை பூட்டுங்கள்' என ஆவேசமாக மைக்கில் சத்தம் போட்டார். அதன்பிறகே கட்சியினர் மீண்டும், கூட்ட அரங்கில் வந்து அமர்ந்தனர்.அமைச்சரின் டென்ஷன் கட்சி நிர்வாகிகளுக்கு நெருடலை ஏற்படுத்தியது.