நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூலுக்கு தீர்வு தேவை
கடலுார் மாவட்டத்தில், சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் வட்டாரங்களில் கடந்த ஒரு மாத காலமாக நெல் குறுவை அறுவடை பணிகள் நடந்து வருகிறது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 10க்கும் மேற்பட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இந்த கொள்முதல் நிலையங்களில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், மறைமுகமாக விவசாயிகளிடம் மூட்டைக்கு 10 ரூபாய் வீதம் கொள்முதலுக்கு வசூல் செய்யப்பட்டது. படிப்படியாக ரூ. 25, 35, 45, தற்போது 55, அதிலும் ஒருசில இடங்களில் 65 வரை வசூலிக்கப்பட்ட பின்புதான் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.விவசாயிகள் முறைப்படி பட்டா, சிட்டா கொடுத்து ஆன்லைனில் பதிவு செய்தாலும் சீனியாரிட்டி முறை பின்பற்றப்படாமல், பணம் கொடுப்பவர்களின் நெல்லை கொள்முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.மூட்டை பிடிப்பது, லாரிகளில் லோடு ஏற்றி நெல் மூட்டைகளில் குடோனுக்கு கொண்டு செல்ல அரசு கொடுக்கும் ்தொகை போதுமானதாக இல்லை என்பதால் வசூலிக்கப்படுவதாக விவசாயிகளிடம் கொள்முதல் நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.பணம் வசூலிக்கக்கூடாது என அரசு அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், நடவடிக்கை எடுத்தும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஸ்ரீமுஷ்ணம் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்டதால் விவசாய தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், இது தொடர்பாக கொள்முதல் நிலைய ஊழியர்கள் 3 பேரை கலெக்டர் சஸ்பெண்ட் செய்த சம்பவமும் என, பிரச்னை பெரிதாகி வருகிறது.எனவே, மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் வசூல் நடவடிக்கையை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.