என்.எல்.சி., சுரங்கம் முன் போராட்டம்; ஒப்பந்த தொழிலாளர்கள் 53 பேர் கைது
மந்தாரக்குப்பம்; என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் நுழைவு வாயில் முன், போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 53 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், 18 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளியாக உள்ள அவர்களுக்கு பணிக்கொடை, மருத்துவ சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.எனவே, தங்களை என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 8:00 மணியளவில் என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன் உள்ள சாலையில் அமர்ந்து 75க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.என்.எல்.சி., அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, மாலை 3:30 மணியளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் 53 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.