முதலைகள் விட இடமின்றி தவிக்கும் வனத்துறை
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கொள்ளிடக்கரை கிராமங்கள் மற்றும் பழைய கொள்ளிடம் ஆற்றின் ஓரங்களில் முதலைகள் அதிக அளவு உள்ளது. ஆறு, வாய்க்கால் கரையோரங்களில் பதுங்கி இருக்கும் இவைகள், 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடு, மாடுகளை கடிப்பது வழக்கம். மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது.காலப்போக்கில், ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடிக்க துவங்கியது. கடந்த 15 ஆண்டில் 20 க்கும் மேற்பேட்டோர் முதலை கடியால் உயிர் இழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் கை, கால்கள் இழந்தும், காயம் அடைந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் கொள்ளிட கரையோர கிராமங்களில் முதலை அச்சத்தால் மக்கள் தவித்து வருகின்றனர்.இதன் காரணமாக, சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கை தொடர்ந்து வருகிறது. சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.,க்களாக வருபவர்கள், தொடர்ந்து சட்டசபையில் கோரிக்கை வைத்தும் இதுவரையில், முதலை பண்ணை அமைக்கப்படவில்லை.சிதம்பரம் பகுதிகளில் வனத்துறையால் பிடிக்கப்படும் முதலைகள், சிதம்பரத்திற்கு குடிநீர் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட, வக்காரமாரி குளத்தில் விடப்படுவது வழக்கம். ஆனால், குளம் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளதால், மழை, வெள்ள காலங்களில் முதலைகள் வெளியேறி மீண்டும் கொள்ளிடம் வழியாக கிராமங்களுக்கும் புகுந்து விடுகிறது.இந்நிலையில் வாக்காரமாரி குளம் தற்போது துார்வாரும் நிலையில், அதில் இருந்த முதலைகள் ஓட்டு மொத்தமாக வெளியேறிவிட்டது. இதனால் சிதம்பரம் பகுதிகளில் மக்கள் அச்சத்துடன் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.ஆனால், வனத்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை, முதலை கடித்து பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமே அவர்கள் பணியாக செய்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது வக்கார குளமும் துார்வாரும் பணி நடப்பதால், சிதம்பரம் பகுதியில் பிடிபடும் முதலைகளை விட இடமின்றி, வனத்துறையினர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 8 முதலைகளை வனத்துறையினர் பிடித்தனர். அவர்களை விடுவதற்கு இடமின்றி, அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றிலேயே மீண்டும் விட்டு வருகின்றனர். அவைகள் அங்கிருந்து மீண்டும் பிடிபட்ட இடத்திற்கே வந்துவிடுகிறது.எனவே, மனித உயிரிழப்பை கருத்தில் கொண்டு, சிதம்பரத்தில் முதலைகளை பாதுகாப்பாக விட, முதலை பண்மை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்று மையம் வேஸ்ட்
சிதம்பரத்தில் பிடிபடும் முதலைகளை பாதுகாக்க, நெய்வேலியில், முதலை மாற்று மையம் கடந்த 2016 ம் ஆண்டு, 20 லட்சம் செலவில்,அமைக்கப்பட்டது. ஆனால் அதனை வனத்துறையினர் சரியான முறையில், பராமரிக்காததால், அங்கு முதலைகளை விட முடியாமல் போனது. இதனால் அந்த திட்டமும் வீணாகியது.