புறக்கணிக்கப்படும் பண்ருட்டி நகராட்சி; 3 ஆண்டாக கமிஷனர் இல்லை; அனைத்து பணிகளும் ஸ்தம்பிப்பு
பண்ருட்டி நகராட்சி, 33 வார்டுகளில் 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 16 ஆயிரம் பேர் வரி செலுத்துகின்றனர். மாவட்டத்தின் வியாபார ஸ்தலங்கள் நிறைந்த நகராக விளங்கி வருகிறது. இருந்தும், நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக நிரந்தமாக கமிஷனர் நியமிக்கப்படாமல், அனைத்து பணிகளும் முற்றிலும் முடங்கியுள்ளது, குப்பை அள்ளும் வாகனத்திற்கு டீசல் போடுவதற்கு கூட முடியாத நிலை உள்ளது. மாதந்தோறும் நடத்த வேண்டிய நகராட்சி கூட்டங்கள் கூட இரண்டு மாதமாக நடத்தப்படவில்லை. இதனால், மாவட்டத்தில் பண்ருட்டி நகராட்சி புறக்கணிக்கப்பட்டு வருவதாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.பண்ருட்டி நகராட்சி கமிஷனராக மகேஸ்வரி, கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, 2022ல் மாற்றப்பட்டார். பின்னர், விருத்தாசலம் கமிஷனராக இருந்த பானுமதி கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து பீரித்தி என்பவர் நியமிக்கப்பட்டு, உடனடியாக விருத்தாசலம் கூடுதல் பொறுப்புக்கு சென்றுவிட்டார். தற்போது விருத்தாசலம் கமிஷனர் கூடுதல் பொறுப்பு கவனித்து வரும் நிலையில், பண்ருட்டி பக்கம் தலைகாட்டுவதே இல்லை. 2 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தும்போது மட்டும் வருகிறார்.நகராட்சியில் நிரந்தர கமிஷனர் இல்லாததால் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர்வரி, தொழில்வரி உள்ளிட்டவைகள் வசூலிப்பதில் சிக்கல் உள்ளது.பஸ் நிலைய, காய்கறி மார்க்கெட் கட்டட பணி தமிழக முதல்வர் துவக்கி வைத்தும், துவங்காமல் உள்ளனர். அத்தியாவசிய பணிக்கான பில்கள் கூட நீண்ட நாட்கள் கிடப்பில் கிடக்கிறது. கடலுார் கல்வி மாவட்டத்தில் இருந்து பண்ருட்டி, அண்ணாகிராமம் வட்டாரம் விருத்தாசலம் தலைமையிடமாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் வசம் மாறியது. பின் பண்ருட்டி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை கோட்ட தலைமையகம் கடலுாரில் இருந்து விருத்தாசலமாக மாறியது.தற்போது நகராட்சி கமிஷனர் கூட விருத்தாசலத்தில் இருந்து வந்து பொறுப்பை கவனிக்கும் நிலை உள்ளது. இதில் ஏதோ அரசியல் விளையாட்டு இருப்பதாகவும், அதனால் பண்ருட்டிக்கு முக்கியத்துவம் தராமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.