ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் மறியல்
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே நத்தம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதை தடுக்க கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் அடுத்த எருமனுார் ஊராட்சி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று பகல் 1:00 மணியளவில், ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலுார் மார்க்கமாக சென்ற வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இருசக்கர வாகனங்களை கூட அனுமதிக்காததால், வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, நத்தம் புறம்போக்கு நிலத்தை வெங்கடேசன் என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதை தடுக்க வலியுறுத்தினர். இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆக்கிரமிப்பு அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.அதுபோல், வெங்கடேசனை நேரில் வரவழைத்து, தாசில்தார் உத்தரவு வரும் வரை கட்டுமான பணியை தொடரக் கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், கடலுார் - விருத்தாசலம் சாலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.