உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாவட்டத்தில் 140 மைதானங்கள்... தயாராகிறது; துணை முதல்வர் வருகையால் ஜரூர்

 மாவட்டத்தில் 140 மைதானங்கள்... தயாராகிறது; துணை முதல்வர் வருகையால் ஜரூர்

விருத்தாசலம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால், கடலுார் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி வருகையை முன்னிட்டு 140 கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் உட்பட 14 ஒன்றியங்களில் 600க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தலா 20 லட்சம் ரூபாயில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன. இதில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி காலப்போக்கில் துருபிடித்து பழுதாகின. இதனால் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகளுக்கு பயிற்சிகள் மேற்கொள்ள முடியாமல் கிராமப்புற மாணவர்கள் சிரமமடைந்தனர்.இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அம்மா விளையாட்டு பூங்கா என்ற பெயரில் தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி சாதனங்களுடன், பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விளையாட்டு பூங்காவை மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்த முடியாமல் போனது.இந்நிலையில், கிராமங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை சீரமைக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் தலா 10 ஊராட்சிகளை மாடலாக தேர்ந்தெடுத்து, விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. வரும் 25ம் தேதி துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி வருகையின்போது, மாவட்டத்தில் விளையாட்டு மைதானங்கள் இல்லை என்ற குறை இல்லாத அளவிற்கு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதற்காக, 140 ஊராட்சிகள் தேர்வு செய்து, விளையாட்டு மைதானங்களை சீரமைத்து, உபகரணங்களை உடனுக்குடன் வழங்கி சீரமைக்க உத்தரவிடப்பட்டது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கூடுதல் கலெக்டர் சரண்யா ஆகியோர் முயற்சியால், ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தலா 1.50 லட்சம் ரூபாயில் புதிதாக அல்லது பழைய மைதானங்களை சீரமைத்து, அனைத்து விளையாட்டு உபகரணங்களும் பயன்படும் வகையில் மாற்றி அமைக்கும் பணியில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, விருத்தாசலம் ஒன்றியத்தில் சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில் 5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். பி.டி.ஓ.,க்கள் இப்ராஹிம், மோகனாம்பாள் ஆகியோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை