விவசாயியை தாக்கி கட்டிப்போட்டு 21 ஆடுகளைத் திருடிய 3 பேர் கைது
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே விவசாயியை தாக்கி கட்டிப்போட்டு 21 ஆடுகளை மினி சரக்கு வேனில் கடத்திச் சென்ற வாலிபர் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் அடுத்த காவனுாரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 60; விவசாயி. இவர் 300 ஆடுகளை அதே பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு, கீரமங்கலம் - தேவங்குடி சாலையோர நிலத்தில் கிடை கட்டியிருந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, மினி சரக்கு வேனில் வந்த 3 பேர், ராமச்சந்திரனின் முகத்தை துணியால் மூடி, தாக்கி, அவரை கட்டிப்போட்டு விட்டு 21 ஆடுகளை திருடிச்சென்றனர்.அப்போது ரோந்து போலீசில் மூவரும் சிக்கினர். விசாரணையில், சேத்தியாத்தோப்பு அடுத்த அகரஆலம்பாடி முருகன் மகன் சதீஷ், 22; மற்றும் 17, 16 வயது சிறுவர்கள் என தெரியவந்தது.இந்நிலையில், நேற்று காலை நிலத்தில் மயங்கிக் கிடந்த ராமச்சந்திரனை அப்பகுதி மக்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், சதீஷ் மற்றும் 2 சிறுவர்கள் என 3 பேர் மீதும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், மினி சரக்கு வேனை பறிமுதல் செய்து 21 ஆடுகளையும் மீட்டனர்.