முதல்வரை கண்டித்து பா.ம.க., மறியல் கடலுார் மாவட்டத்தில் 377 பேர் கைது
கடலுார்: தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, கடலுார் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ம.க., வினர் 377 பேரை போலீசார் கைது செய்தனர்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாலம், நெய்வேலி ஆகிய இடங்களில் அக்கட்சியினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததனர்.கடலுார் அண்ணா பாலம் அருகில் பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கும், பா.ம.க.,வினருக்கும் இடையே திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர்கள் தர்மா, தாமரைக்கண்ணன், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, சமூகநீதி பேரவை செயலாளர் தமிழரசன், மாணவரணி விஜயவர்மன், நகர தலைவர் ரமேஷ், நகர செயலாளர் கண்ணன் உள்ளிட்ட 74 பேர் கைது செய்யப்பட்டனர். விருத்தாசலம்
விருத்தாசலம் பாலக்கரையில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் தமிழரசி ஆதிமூலம் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உட்பட 73 பேரை கைது செய்தனர். சிதம்பரம்
காந்தி சிலை அருகே மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, மாநில நிர்வாகிகள் மதேவதாஸ் படையாண்டவர், சஞ்சீவி, அருள், ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். போலீசார் அனுமதி மறுத்தும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, 130 பேரை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி
நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் முதல்வரை கண்டித்து கோஷமிட்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்து வைத்திலிங்கம், வேங்கைசேகர், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், மணிவாசகம், சக்திவேல், ஏழில் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள், 100 பேரை போலீசார் கைது செய்தனர்.