மேலும் செய்திகள்
பைக்கில் கஞ்சா கடத்தல் நான்கு பேர் கைது
28-Feb-2025
பெண்ணாடம்; பெண்ணாடம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து, கஞ்சா பதுக்கி விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திட்டக்குடி அடுத்த கொடிகளத்தை சேர்ந்தவர் பாண்டியன் மகன் கவியரசன், 23; இவரது மனைவி சங்கீதா, 30; இருவரும் பெண்ணாடம் சுமைதாங்கி பஸ் நிறுத்தம் அருகில் கடந்த ஒன்றரை மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று காலை பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில் போலீசார், கவிரயசன் வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டிற்குள் இருந்த கவியரசன், சங்கீதா, கவியரசனின் நண்பர்கள் திருவள்ளூர் மாவட்டம், அம்பேத்கர் நகர் குமார் மகன் லோகேஷ், 23; சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை சீராளன் மகன் தியாகு, 24; ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தனர். வீட்டை சோதனை செய்தபோது, 1 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து, 4 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பெண்ணாடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா, மதுபாட்டில், குட்கா பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெண்ணாடத்தை சேர்ந்த நபர், வீடு வாடகைக்கு எடுத்து புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
28-Feb-2025