நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்
கடலுார் : கிராமப் புறங்களில், 50 சதவீத மானியத்தில் நாட்டு கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2025--26ம் ஆண்டில், கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், கடலுார் மாவட்டத்தில் 10 தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு பயனாளிக்கு 50 சதவீத மானியமாக 1,65,625 ரூபாய் வரை வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.கோழி கொட்டகை அமைக்க குறைந்தது 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். பயனாளி அதே கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள் ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி உரிய ஆவணங்களுடன் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.