உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

விருத்தாசலம்: விருத்தாசலம் சேமிப்பு கிடங்கிற்கு, லாரியில் ஏற்றி வரப்பட்ட 5 ஆயிரம் நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால், மழையில் நனைந்து சேதமடைந்தன. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் குறுவை நெல் அறுவடை பணியில் ஈடுபட்டு வந்தனர். அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம், விருத்தாசலம் சேமிப்பு கிடங்கிற்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் கொண்டு வரப்பட்டன. தீபாவளியையொட்டி, கடந்த சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதன்காரணமாக, சேமிப்பு கிடங்கிற்கு லாரியில் கொண்டுவரப்பட்ட 5 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த நான்கு நாட்களாக விருத்தாசலம் பகுதியில் பெய்த மழை காரணமாக, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல் மணிகள் அனைத்தும், நாற்றாங்கால் போல், முளைப்பு விட்டுள்ளன. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ