அதிவேகமாக செல்லும் வாகனங்கள்; விரிவாக்க சாலையில் தொடர் விபத்து
சேத்தியாத்தோப்பு : விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை விரிவாக்க சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை விரிவாக்க சாலை பணிகள் கடந்த 2015ம் ஆண்டில் துவங்கி 2017-18ம் ஆண்டில் முடிக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. சாலை விரிவாக்கம் செய்யாமல் இருந்த போது, கிராமங்களில் இருந்து ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு எந்த விபத்தும் இன்றி விவசாயிகள் சென்று வந்தனர். சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதில் இருந்து கர்நாடகா, கேராளவில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு மீன் லோடு ஏற்ற வரும் லாரிகள் என அடிக்கடி அதிக வேகமாக செல்கின்றன. இதனால், சாலையையொட்டி உள்ள கிராமங்கள் அனைத்தும் விவசாய நிலங்களை கொண்டுள்ள நிலையில் வேலைக்கு செல்பவர்கள் சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது. சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோயம்புத்துார், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகள், கார்கள் அதிக வேகமாக செல்வதாலும் விபத்துகள் நடக்கிறது. இதனால், பாதசாரிகள் அச்சத்துடன் நடந்த செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் துவங்கி ஆணைவாரி, மணக்காடு, எறும்பூர், வளையமாதேவி, தர்மநல்லுார், கத்தாழை, சிறுவரப்பூர் ஆகிய இடங்களில் வாகன விபத்துக்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறையினர் வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாகன விபத்துகள் குறித்து விழிப்புணர்வு பலகைகள் எதுவும் இல்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துக்கள் ஏற்படாதவாறு போக்குவரத்து சிக்னல், சாலையில் பிரதிபலிப்பான், வெள்ளை, மஞ்சள் கோடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.