வாய்க்கால் கட்டையில் அரசு பஸ் மோதி விபத்து
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே அரசு சொகுசு பஸ், வாய்க்கால் தடுப்பு கட்டையில் மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையிலிருந்து 60 பயணிகளுடன் கும்பகோணத்திற்கு புறப்பட்ட டின்.01.ஏ.என் 3409 பதிவெண் கொண்ட அரசு குளிர்சாதன சொகுசு பஸ் நேற்று காலை 11:00 மணிக்கு சேத்தியாத்தோப்பு நோக்கி வந்து கொண்டிருந்தது. குமாரக்குடி வளைவு பாலம் அருகே பஸ் வந்த போது, எதிரே வந்த கனரக வாகனத்திற்கு வழிவிட டிரைவர் பிரேக் அடித்தார். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலம் அருகே உள்ள 30 அடி பள்ள வாய்க்கால் தடுப்பு கட்டையில் மோதி தொங்கியபடி நின்றதால் பரபரப்பு நிலவியது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பயணிகளை மீட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.