சிறுபாக்கம் பஸ் ஸ்டாண்டை பராமரிக்க நடவடிக்கை தேவை
சிறுபாக்கம்; சிறுபாக்கம் பஸ் ஸ்டாண்டை பராமரிக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிறுபாக்கம் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, வருவாய் ஆய்வாளர் மற்றும் சார்ப்பதிவாளர் அலுவலகங்கள், தபால் நிலையம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வேளாண் கூட்டுறவு வங்கி, தனியார் வங்கிகள் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி, திறக்கப்பட்டது. பஸ் ஸ்டேண்டிற்குள் வணிக வளாகங்களை மங்களூர் ஒன்றிய அலுவலர்கள் ஏலம் விட்டு, ஊராட்சிக்கு வருவாய் ஈட்டுகின்றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் முறையாக பராமரிப்பு பணிகள் செய்யாததால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்தும், கழிவறைகள் பயன்பாடின்றியும், பஸ்கள் பஸ் ஸ்டேண்டிற்குள் வராமல் சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், சுற்றுப்புற கிராம மக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே, சிறுபாக்கம் பஸ் ஸ்டாண்டை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.