நெல் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டப்பணிகள்; குமராட்சியில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
கடலுார் : குமராட்சி வட்டாரத்தில் நெல் குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டப்பணிகளை மாநிலத்திட்ட வேளாண் துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.குமராட்சி வட்டாரத்தில், நடப்பு குறுவை பட்டத்தில் 5ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை சிறப்பு தொகுப்பு திட்டப்பணிகளை மாநிலத்திட்ட வேளாண் துணை இயக்குனர் விஜயராகவன், ஆய்வு செய்தார். ஆய்வில் குறுவை தொகுப்பு இயந்திர நடவு ஆவணங்கள் மற்றும் ஒரு விவசாயிக்கு இயந்திர நடவு பின்னேற்பு மானியத்தொகையாக 4ஆயிரம் ரூபாய் வீதம், நெல் விதை 50சதவீத மானியத்திலும் மற்றும் நுண்ணுாட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் போன்ற இடுபொருட்கள் 50சதவீத மானிய விலையில் குமராட்சி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் அம்மா பேட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைத்து வழங்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.மேலும் குறுவை தொகுப்புத்திட்டத்தின் கீழ் இயந்திர நடவு செய்யப்பட்ட சிவபுரி, கடவாச்சேரி, கூத்தன்கோவில், பெராம்பட்டு, கண்டியமேடு ஆகிய கிராமங்களில் நெல் சாகுபடி வயல்களை ஆய்வு செய்தார். ஆய்வின் போது குமராட்சி வேளாண் உதவிஇயக்குனர் தமிழ்வேல், துணை வேளாண் அலுவலர் தெய்வசிகாமணி, உதவி வேளாண் அலுவலர் மாலினி, வெங்கடேஷ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.