| ADDED : நவ 09, 2025 06:12 AM
கடலுார்: வாக்காளர்கள் விபரங்கள் குறித்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும் என அ.தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன்,எம்.எல்.ஏ.,க்கள் அருண்மொழித்தேவன், பாண்டியன், ஆகியோர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வரும் 2026ம் ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களால் வீடு வீடாக சென்று படிவங்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் மூலமாக அதிகபட்சம், 50 படிவங்கள் பெற்று வந்து வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் மூலமாக பெற்றால் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால், வீடுவீடாக சென்று வழங்கப்படும் வாக்காளர்கள் விபரங்கள் குறித்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், சேவல்குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாதவன், ஒன்றிய செயலாளர் வினோத், பாபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.