உதயநிதி காரை மறித்து நிவாரணம் கேட்ட மூதாட்டி
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் மழையால் பாதித்தவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.பயனாளிகளுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கியிருந்தனர். டோக்கன் வைத்திருந்தவர்களை மட்டும் நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபத்தினுள் அனுமதித்தனர். டோக்கன் கிடைக்காத 250க்கும் மேற்பட்ட பெண்கள், மூதாட்டிகள் மண்டபத்தின் வெளியே 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தனர்.நிவாரணம் வழங்கிவிட்டு துணை முதல்வர் உதயநிதி தனது காரில் புறபட்டார். கார் சிறிது தூரம் சென்ற நிலையில், டோக்கன் கிடைக்காமல் சாலையோரம் நின்றிருந்த மூதாட்டி திடீரென உதயநிதி சென்ற காரின் முன் மறித்தார். அவரும் பொறுமையாக நின்று, என்ன பிரச்னை என மூதாட்டியிடம் கேட்டார். தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என கூறினார். அருகில் நின்றிருந்த அதிகாரிகளை அழைத்த உதயநிதி, மூதாட்டிக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.