மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்
கடலுார்: கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் மற்றும் பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், அப்பகுதிகளை மாநகராட்சியோடு இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேற்று துணை பி.டி.ஓ., ராஜா தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் சுபஸ்ரீ, கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைக்க அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க முயற்சிக்கின்றனர். இதனால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகும் சூழல் உள்ளது எனக் கூறி மாநக ராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கவே, சுபஸ்ரீ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதே போன்று, பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், இப்பகுதியை மாநகராட்சியோடு இணைக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.