உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துறைமுகத்தில் மீண்டும் ரயில் பாதை அமைக்க... ஏற்பாடு: ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

துறைமுகத்தில் மீண்டும் ரயில் பாதை அமைக்க... ஏற்பாடு: ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

கடலுார்: கடலுார் முதுநகரில் இருந்து துறைமுகம் வரையிலான 5 கி.மீ., துாரத்திற்கு ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் விரைவில் அமைய உள்ளது. ஆசியாவில் உள்ள பழமையான துறைமுகங்களில், கடலுார் துறைமுகமும் ஒன்று. இத்துறைமுகம் 142 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கரையிலிருந்து ஒரு மைல் துாரத்திலேயே இயற்கையாகவே 15 மீ., ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது. எல்லா காலங்களிலும் ஏற்றுமதி, இறக்குமதிககு உகந்த துறைமுகமாக இது கருதப்படுகிறது. கடலுார் முதுநகர் ஜங்ஷனில் இருந்து துறைமுகத்திற்கு ஏற்கனவே தனியாக மீட்டர்கேஜ் ரயில் பாதை சென்று கொண்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட பாதை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது. இதன் மூலம் கப்பலில் இருந்து யூரியா மூட்டைகள், டி.ஏ.பி., மூட்டைகள், கோதுமை மூட்டைகளை இறக்கி அதை ரயில் மூலமாக வேனில் ஏற்றி பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இதேப் போன்று, கடலுார் முதுநகரில் இருந்து இரும்பு தாது உள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. கடலுார் துறைமுகம் எல்லா காலத்திற்கும் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய ஏற்ற துறைமுகமாக இருந்ததால் எல்லா காலங்களிலும் கப்பல்கள் வந்து சென்றன. கடந்த 2002ம் ஆண்டுக்கு பின் கப்பல் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சாகர் மாலா திட்டத்தில் கடலுார் துறைமுகத்தில் பல்வேறு நவீன மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தப்பட்டதால் இந்த ரயில் பாதை பயனற்று உள்ளது. இதனால், போக்குவரத்து சரி செய்ய சாலையில் இருந்த கேட் மற்றும் ரயில்பாதை முழுவதும் அகற்றப்பட்டது. ரயில் பாதை இருந்த சுவடே இல்லாமல் மாறியது. தற்போது கடலுார் துறைமுகம் நவீனமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கப்பல் அணையும் தளம், அணுகு சாலைகள், ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக கடலுார் முதுநகர் ஜங்ஷனில் இருந்து துறைமுகத்திற்கு 5 கி.மீ,. துாரத்திற்கு ரயில்வே பாதை அமைக்கும் பணியில் சாத்தியக் கூறுகள் உள்ளதா என, ரயில்வே துறை அதிகாரிகள் கடந்த 13ம் தேதி ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, ரயில் பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதன் மூலம் மீண்டும் துறைமுகம் செயல்பட துவங்கினால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நேர்முக மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை