கடலுார் அருகே அருவா மூக்கு திட்டப்பணி... தீவிரம்; 24 கிராமங்களில் வெள்ள பாதிப்பு தடுக்கப்படும்
கடலுார்: கடலுார் அருகே, 24 கிராம ஊராட்சிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க, பரவனாற்றில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்படும் 'அருவா மூக்கு' திட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தென் இந்தியாவில் கடலோரத்தில் அமைந்துள்ள கடலுார் மாவட்டம், இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004ல் சுனாமி, 2011ல் 'தானே' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை. உள்ளிட்ட 15 மாவட்டங்களின் வடிகாலாக உள்ளது. இதனால், ஒவ்வொரு மழைக்காலங்களிலும் மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்த வகையில், மழை வெள்ள காலங்களில் கடலுார் அருகே குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ஓடும் பரவனாற்றில் மழைநீரும், நெய்வேலி சுரங்க நீரும் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால், பரவலாறு வழித்தடத்தில் இருக்கும் 24 கிராம ஊராட்சிகளில் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் ஆண்டுதோறும் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்க வைத்து வந்தனர். ஆனால், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அருவா மூக்குத்திட்டம் நிறைவேற்றுவதற்கான சாத்தியகூறுகள் குறைவாக இருந்தது. இப்பகுதியில் இயற்கையாக உள்ள மணல்மேடு அழியும் என்றும், சுனாமி காலத்தில் கடலுக்கு அரணாக, மணல் மேடுகள் உள்ளதாக கூறி, திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உள்ளூர் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முயற்சியால் இத்திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, மதிப்பீடு தயார் செய்தது. அதையடுத்து, மழைக்காலங்களில் பரவனாற்று வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, தமிழக அரசு 81.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அதையடுத்து, அருவா மூக்கு திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணிகள் துவக்கப்பட்டது. தற்போது பணிகள் தீவிரமடைந்து, இரவு பகலாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் இப்பணிகள் நிறைவேற்றப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருவதால், ஆண்டாண்டு காலமாக பரவனாற்று வழித்தடங்களில் வெள்ளத்தால் விவசாய நிலங்கள் மற்றும் கிராம பகுதிகள் பாதிப்புக்கு நிரந்த தீர்வு கிடைக்கும்.