உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சட்டசபை பொது நிறுவனங்கள் குழு நாளை... வருகை

சட்டசபை பொது நிறுவனங்கள் குழு நாளை... வருகை

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சட்டசபை பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் நாளை (4ம் தேதி) வருகை தந்து பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்கின்றனர்.தமிழக சட்டசபை பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் மாவட்டம் வாரியாக நடந்து வரும் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், தமிழக சட்டசபை பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் அணைக்கட்டு எம்.எல்.ஏ., நந்தகுமார் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் வேடசந்துார் காந்திராஜன், ஸ்ரீபெரும்புதுார் செல்வபெருந்தகை, கும்பகோணம் அன்பழகன், சிவகாசி அசோகன், பல்லடம் ஆனந்தன், திருச்செங்கோடு ஈஸ்வரன், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி கடம்பூர் ராஜீ, செங்கம் கிரி, பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, பொன்னேரி துரை சந்திரசேகரன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைசெல்வன், கீழ்வேலுார் நாகை மாலி, ஒசூர் பிரகாஷ், விராலிமலை விஜயபாஸ்கர், மயிலாப்பூர் வேலு, பாபநாசம் ஜவாஹிருல்லா ஆகியோர் அடங்கிய 18 பேர் கொண்ட குழுவினர் நாளை (4ம் தேதி) கடலுார் மாவட்டத்திற்கு வருகின்றனர்.இக்குழுவினர் மாவட்டத்தில் பொது நிறுவனங்கள் சார்பில் திட்டப் பணிகள் நடக்கும் பல்வேறு இடங்களுக்கு சென்று, செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கு தேவைப்படும் திட்டங்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.அன்று மாலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் போன்ற துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.இதில், துறை சார்ந்த பணிகள், திட்ட செயல்பாடுகள், நிலுவை திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ