அடரி அரசு மேல்நிலைப்பள்ளி
வேப்பூர்: கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியில், அடரி அரசு மேல்நிலைப்பள்ளி முக்கிய பங்காற்றி வருகிறது. கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடியில் வேப்பூர் அருகே அடரி கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கல்வியறிவு பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடையும் நோக்கில், கடந்த 1996ம் ஆண்டு ஆகஸ்ட், 12ம் தேதி அடரி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவர்களும் பள்ளியில் சேர்ந்ததை தொடர்ந்து கடந்த, 2007ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, தலைமை ஆசிரியராக ராஜேந்திர பிரசாத் பணிபுரிகிறார். இங்கு, 6 முதுகலை ஆசிரியர்கள், 9 பட்டதாரி ஆசிரியர்கள், 2 இடைநிலை ஆசிரியர்கள், 2 பகுதி நேர ஆசிரியர்கள், 1 ஆய்வக உதவியாளர், 1 எழுத்தர், 4 தற்காலிக ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 25 பேர் பணிபுரிகின்றனர். சிறுபாக்கம் மற்றும் சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 534 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், இப்பள்ளியில், 15 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வகம், 1 உயர் தொழில் நுட்ப ஆய்வகம், 2 ஸ்மார்ட் போர்ட் மற்றும் 2 புரஜெக்டர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்றல், கற்பித்தல் நடக்கிறது. மேலும், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புடன் பள்ளியின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் மாதந்தோறும் எஸ்.எம்.சி., கூட்டம் நடத்தி விவாதம் நடக்கிறது. இப்பள்ளி மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் நடந்த கலைத்திருவிழா போட்டியில் 'இலக்கிய நாடகம்' என்ற தலைப்பில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்று மாநில அளவில் பங்கேற்றனர். விளையாட்டு போட்டியில் கபடியில் மண்டல அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளையும், மாவட்ட அளவில் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் நடக்கும் கலைத்திருவிழா மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று தொடர் சாதனை படைக்கின்றனர். கடந்த கல்வியாண்டில் நடந்த அரசு பொதுத் தேர்வில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில், 90 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 10ம் வகுப்பில் 489 மதிப்பெண்ணும், பிளஸ் 2வில் 538 மதிப்பெண்ணும் பெற்றனர். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். அடரி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி, நாராயணசாமி, ராஜகோபால், தங்கவேல், ராஜ சுந்தரம், கிருஷ்ணசாமி, சின்னசாமி, சுப்ரமணியன், துரைசாமி ஆகியோர் தங்கள் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கி, பள்ளியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களின் மூலம் கல்வியறிவு, சமூக பொறுப்பு, தனிமனித ஒழுக்கம், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் உள்ளிட்டவைகளை கற்றுக்கொண்டு சிறந்த மாணவர்களாக உருவாகி வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் தேவை
பள்ளியில் போதிய கட்டட வசதிகளும், கழிவறை வசதிகளும் இல்லை. அதனால், 8 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், நுாலகம், கழிவறை வசதிகள் தேவை. மேலும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் வசதியும் தேவை.