ஆசிரியையிடம் நகை பறிக்க முயற்சி; கடலுாரை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது
பாகூர் : அரசு பள்ளி ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற கடலுார் வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம் பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் கமாலுதீன் மனைவி விஜயலட்சுமி, 37; பாகூர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர். இவர் கடந்த 5ம் தேதி பணி முடித்துவிட்டு மாலை 4:30 மணிக்கு ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார்.பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் கம்பெனி அருகே சென்ற போது, பல்சர் பைக்கில் வந்த வாலிபர்கள், திடீரென்று விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பிடித்து இழுத்துனர்.விஜயலட்சுமி சாதுர்யமாக செயல்பட்டு அவர்களின் கையை தட்டிவிட்ட நிலையில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே, அவர்கள் தப்பி சென்றனர்.புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கிடைத்த தகவலின்பேரில், கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சிவகுமார் 21; தினகரன் 29; சுதர்சன் 28; செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பல்சர் பைக்கை பறிமுதல் செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.