திருவிழாவில் தவறிய சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு
கடலுார்; வடலுார் தைப்பூச திருவிழாவில் காணாமல் போன சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.வடலுார் தைப்பூச ஜோதி தரிசன விழாவில், நேற்று முன்தினம் மாலை மனநலம் குன்றிய, மாற்றுத்திறனாளி சிறுவன் தனியாக நின்று கொண்டிருந்தான். பாதுகாப்பு பணியில் இருந்தபோலீசார், அச்சிறுவனை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுவனுடன் வந்தவர்களை கண்டறிய போலீசார் சமூக வலைதளங்கள் மூலம் செய்தியை பகிர்ந்தனர். இரவு வரை யாரும் வராததால், மேட்டுக்குப்பத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.சமூக வலைதளங்களில் பகிர்ந்த தகவலை பார்த்த கள்ளக்குறிச்சி மாவட்டம் காந்தலவாடி கிராமத்தை சேர்ந்த சிறுவனின் தந்தை நேற்று அதிகாலை வடலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, விபரங்களை கூறினார். அதனைத் தொடர்ந்து போலீசார், சிறுவர் இல்லத்தில் தங்க வைத்திருந்த சிறுவனை அழைத்து வந்து அவரது தந்தையிடம் ஒப்படைத்தனர்.