புவனகிரியில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்; எஸ்.பி., தலைமையில் போலீஸ் குவிப்பு
புவனகிரி; வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, புவனகிரியில் பா.ம.க, மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தால் பதற்றமான சூழல் நிலவியது.புவனகிரியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு, வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், ஒன்றி செயலாளர் சங்கர் ஆகியோரை அவதுாறாகவும், கொலை மிரட்டல் விடுத்து பேசியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பா.ம.க., நகர செயலாளர் கோபிநாத், போலீசில் புகார் அளித்தார்.இந்நிலையில், கொலை மிரட்டல் விடுத்து பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, புவனகிரி பாலக்கரையில் பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர செலாளர் கோபிநாத் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் தேவதாஸ்படையாண்டவர், கடலுார் மாவட்ட செயலாளர்கள் செல்வமகேஷ், கார்த்திகேயன், முத்துக்கிருஷ்ணன், ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தலைமை தாங்கி பேசினார்.ஆர்ப்பாட்டத்திற்கு ஷாமியானா பந்தல் அமைக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் காலை 11.00 மணியில் இருந்து பகல் 1:00 வரை பாலக்கரையில் நடுரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.எஸ்.பி., ராஜாராமன் தலைமையில், 250க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு வஜ்ரா வாகனங்கள், கைது நடவடிக்கைக்காக 10 பஸ்களை நிறுத்தி வைத்திருந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.போராடட்ம் காரணமாக, புவனகிரி வழியாக சேலம், விருத்தாசலம், கடலுார், புதுச்சேரி, சென்னை சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.