புயல் நிவாரணத்திற்கு லஞ்சம் மாஜி வி.ஏ.ஓ.,வுக்கு 2 ஆண்டு சிறை
கடலுார்: விவசாயிக்கு புயல் நிவாரணத் தொகை வழங்க 9,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய முன்னாள் வி.ஏ.ஓ.வுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் உத்தரவிட்டது. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலபருத்திக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைதம்பி, 45; விவசாயி. இவர், கடந்த 2012ம் ஆண்டு 'தானே' புயல் நிவாரணத் தொகை பெற மேலபருத்திக்குடி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்கு, அப்போதைய வி.ஏ.ஓ., வீராசாமி, 65; என்பவர் 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஆசைதம்பி கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார், அறிவுரைப்படி அதே ஆண்டு மார்ச் 6ம் தேதி, ரசாயனம் தடவிய 9,000 ரூபாயை சிதம்பரம் காந்தி சிலை அருகில் நின்றிருந்த வீராசாமியிடம் ஆசைதம்பி கொடுத்தார். லஞ்சம் வாங்கிய வீராசாமியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இவ்வழக்கு விசாரணை முடிந்து கடலுார் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், முன்னாள் வி.ஏ.ஓ., வீராசாமிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜரானார்.