பஸ்கள் தாறுமாறாக நிறுத்தம்: பாலக்கரையில் விபத்து அபாயம்
விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை இறக்குவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. விருத்தாசலத்தில் பாலக்கரை ரவுண்டானா, ஜங்ஷன் சாலை, கடலுார் சாலை, வேப்பூர் சாலை மற்றும் கடைவீதி ஆகியவை பிரதான பகுதிகளாக உள்ளன. இங்கு பெரு வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், தேசிய வங்கிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படுகின்றன. தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இப்பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பது தொடர்கிறது. இந்நிலையில் பாலக்கரை ரவுண்டானா பஸ் நிறுத்தத்தில் தாறுமாறாக பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. கடலுார் மார்க்கத்திலிருந்து வரும் பஸ்கள் ரவுண்டானாவின் ஒரு பகுதியை கடந்து எதிர்முனையில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவது வழக்கம். இதனால் பயணிகள் சிரமமின்றி சென்று வந்தனர். சமீப காலமாக கடலூர், நெய்வேலி, சிதம்பரம் பகுதிகளில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ரவுண்டானாவின் முதல் பகுதியிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் எதிர் திசையை கடக்கும் போதும் பஸ்ஸிலிருந்து இறங்கி செல்லும் போதும் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். மேலும் ரவுண்டானாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பஸ்களை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.