காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகள் அதிருப்தி: காப்பீட்டு தொகை வழங்காததால் பாதிப்பு
சிதம்பரம்: சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில், கடந்த ஆண்டு தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டும், இன்சூரன்ஸ் கட்டியதற்கு, காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் ஒவ்வொறு ஆண்டும், கடும் மழை அல்லது கடும் வறட்சி காரணமாக விவசாய பாதிப்பு ஏற்படுவது வழக்கமாகவே உள்ளது. தொடர்ந்து விவசாய பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால், கடலுார் மாவட்டத்தை பேரிட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பல்வேறு இயற்கை இடர்பாடுகளை கடந்துதான், இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய தொழிலை விட முடியாமல், வேறு வழியின்றி, தங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தை தொடர்ந்து, செய்து வருகின்றன்றனர். இதை கருத்தில் கொண்டு பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு, சம்பா பருவத்திற்கு, மத்திய, மாநில அரசுகளின் வலியுறுத்தலின் பேரில், நெல் பயிரிட்ட விவசாயிகள், 95 சதவிகிதத்தினர் ஏக்கருக்கு 500 ரூபாய் இன்சூரன்ஸ் கட்டினர். இதற்காக ரூ. 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் வரை விவசாயிகள் செலவிடுகின்றனர். கடந்த ஆண்டு விட்டு விட்டு மழை பெய்ததால், விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில், ஏக்கருக்கு 30 ல் இருந்து 35 மூட்டை நெல் பிடிக்க வேண்டிய இடத்தில் ், வெறும் 10 மூட்டை மட்டுமே நெல் பிடித்த விவசாயிகளும் உள்ளனர். பல பகுதிகளில் அதுவும் இல்லாமல் போய் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதிலும் பூ விடும் நேரத்தில் பெய்த மழை காரணமாக, நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் காப்பீடு பெற்ற நிறுவனமோ, விவசாயிக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் சில விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது, காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிதம்பரம் வேளாண் விரிவாக்க மையத்தில், அலுவலர்களை உள்ளே வைத்து பூட்டு போட்ட விவசாயிகள், பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடைமடை டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்க மாவடட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.