மிக குறைவான தங்கத்தில் தேர் ; சிதம்பரம் பொற்கொல்லர் அசத்தல்
சிதம்பரத்தை சேர்ந்தவர் பொற்கொல்லர் முத்துக்குமரன், 44; கீழ வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இவர், 14 வயது முதலே தந்தை ஜெயபாலிடம் தொழிலை கற்றுக்கொண்டார். பொற்கொல்லர் தொழிலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர், ஏதேனும் புதுமையாக செய்ய ஆர்வம் ஏற்பட்டது. முதன் முறையாக, தனது 29 வது வயதில் 100 மில்லி கிராம் எடையுள்ள தங்கத்தில் சிறிய மாங்கல்யம் செய்து அசத்தினார். அப்போது அவருக்கு குவிந்த பாராட்டு, அடுத்தடுத்து தாஜ்மஹால், வேளாங்கண்ணி தேவாலயம், நடராஜர் கோவில் பொற்கூரை என, எடை குறைவான தங்கத்தில் செய்து அசத்தினார். கொரோனா காலத்தில் முகக்கவசம், துாய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொது விஷயங்களை கூட தனது திறமையை வெளிப்படுத்தினார்.இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிவில் ஆருத்ரா தரிசன விழா துவங்கியுள்ள நிலையில், ஒரு அங்குலத்திற்கும் குறைவான உயரத்தில் (2.5 மி.மீட்டர்) 900 மி.கிராம் எடையுள்ள தங்கத்தில் தேர் செய்து அசத்தியுள்ளார். அந்த தேரை இழுத்தால் சக்கரம் நகர்வதும், தேரின் மேல் உள்ள கொடி காற்றில் அசைவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், தேருக்குள் வீற்றிருக்கும் வகையில், , 0.030 மில்லி கிராம் தங்கத்தில், சிறிய சொர்ணலிங்கம் செய்துள்ளார். மிகவும் உன்னிப்பாக கவனத்தால் மட்டுமே சொர்ணலிங்கம் தெரியும் வகையில் கைவண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து, முத்துக்குமரன் கூறுகையில், நடராஜர் கோவில் தேர் போன்று தங்கத்தில் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை, அதன்படி, 930 மி.கிராம் அளவில், உலகத்திலேயே மிக குறைந்த அளவு தங்கத்தால், தேர் மற்றும் சொர்ணலிங்கத்தை செய்துள்ளேன். வரும் காலத்தில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், சபரிமலை ஐயப்பன் கோவில் ஆகியவற்றை செய்ய உள்ளேன் என, தெரிவித்தார். பொற்கொல்லர் முத்துக்குமரின் திறமைக்கு பாராட்டு குவிந்து வருகிறது.