உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் - மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம் வாகனங்கள் துள்ளி துள்ளி செல்லும் அவலம்

சிதம்பரம் - மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம் வாகனங்கள் துள்ளி துள்ளி செல்லும் அவலம்

சிதம்பரம்: சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரத்தில் இருந்து மீன்சுருட்டி வரை புதியதாக அமைக்கப்பட்ட சாலை, தரமில்லாமல் மேடு பள்ளங்கள் அதிகம் உள்ளது. வாகனங்கள் துள்ளி துள்ளி செல்வதால், அடிக்கடி விபத்துக்கள் நடப்பதும் வாடிக்கையாகிவிட்டது.கடலுார் மாவட்டம் சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து, 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. 134 கி.மீ., நீளமுள்ள இச்சாலைப் பணிக்கு மூன்று பிரிவாக டெண்டர் விடப்பட்டு, 2019ல் பணி துவங்கியது.திருச்சி -கல்லகம், கல்லகம் - மீன்சுருட்டி, மீன்சுருட்டி - சிதம்பரம் வரை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில், முதல் இரு பகுதி பணிகள், சரியான வகையிலும், குறுகிய காலத்திலும் முடிக்கப்பட்டது,ஆனால், சிதம்பரம் - மீன்சுருட்டி வரை முற்றிலும் விவசாய நிலங்கள் உள்ள பகுதியாக இருந்ததால், பல்வேறு இடர்பாடுகளை கடந்து இறுதியில் முடிக்கப்பட்டது.

பயண நேரம் குறைந்தது

திருச்சியில் இருந்து 50 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலையாகவும், அடுத்து சிதம்பரம் வரை இரு வழிச்சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சிதம்பரத்தில் இருந்து திருச்சி வரை 167 கிலோமீட்டராக இருந்த பயண துாரம், 134 கிலோ மீட்டரானது.அதே சமயம், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலுார் வழியாக திருச்சிக்கு காரில் செல்ல, சுமார் 3 மணி நேரம் 45 நிமிடம் ஆகும். தற்போது, 2 மணி நேரம் 15 நிமிடங்களாக பயண நேரம் குறைந்துள்ளது.

மேடு பள்ளமாக சாலை

சிதம்பரம் - மீன்சுருட்டி வரை உள்ள இரு வழிச்சாலை முற்றிலும் வயல்வெளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் பாசன வாய்க்கால்கள், சிறு ஆறுகள் இருந்ததால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. மேலும், மீன்சுருட்டியில் இருந்து திருச்சி வரை போடப்பட்ட சாலையை போல், இந்த சாலை தரமாக அமைக்கப்படவில்லை.இந்த சாலையில் வாகனத்தில் செல்லும்போது துள்ளி, துள்ளி செல்லும் வகையில் சாலை மேடு பள்ளங்களாக அமைந்துள்ளது. இதனால் நிம்மதியான பயணமாக இல்லை என பயணிகள் புலம்புகின்றனர். பல இடங்களில் சாலை உள்வாங்கி சிறு சிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. பெரிய பள்ளங்களும் உள்ளன.இதனால் சாலையில் வாகனத்தில் சென்றாலே, குதிரையில் செல்வது போல் துள்ளல் அதிகமாக உள்ளது. குமராட்சி அருகே இரு இடங்களில் சாலையில் பள்ளம் ஏற்பட்டதால், அந்த இடத்தை உடைத்து அகற்றி மீண்டும் சீர் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

பாதுகாப்பற்ற பயணம்

சுங்க கட்டண வசூலிக்கும் சாலை, பெரும்பாலும் பாதுகாப்பான பயணமாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த சாலையில் செல்லும் போது, சிறு கவனக்குறைவு கூட பெரும் விபத்தை ஏற்படுத்திவிடும் அளவில் உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட சிதம்பரம் - மீன்சுருட்டி சுங்க கட்டண சாலையில் செல்வது, பாதுகாப்பற்ற பயணத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதிகாரிகள் அலட்சியம்

சாலை திறப்பதற்கு முன்பே, சாலையில் துள்ளல் அதிகமாக உள்ளது குறித்து 'நகாய்' அதிகாரிகளிடம், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் அளித்தபோது, அவசர அவசரமாக, படிப்படியாக சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் மேடுகள் சரி செய்யப்படும் என, அலட்சியமாக பதில் கூறினர். ஆனால், நடவடிக்கை இல்லை. நாளுக்கு நாள் சாலையில் பள்ளங்கள் அதிகரித்து வருகிறது.இப்படிப்பட்ட சாலைக்கு வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்க துவங்கி உள்ளனர். போக்குவரத்திற்கு சரியில்லாத சாலைக்கு சுங்க கட்டணமா என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விபத்து அதிகரிப்பு

சிதம்பரம்- மீன்சுருட்டி சாலை சரியில்லாததால் பாதுகாப்பற்ற பயணமாக உள்ளது. தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. சாலை திறக்கப்பட்ட குறுகிய காலத்தில் 12 பேர் விபத்தில் இறந்துள்ளனர். அதிவேகமாக வருபவர்கள் சாலையில் துள்ளல் இருப்பது தெரியாததால், வாகனத்தை சரியாக கட்டுப்படுத்த முடியாமல், சாலையோர வயலில் பாய்ந்து விழுந்த, சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது.எனவே, சிதம்பரம் - மீசுருட்டி சாலையை சரியான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் அமைத்து, வாகன விபத்துக்களை தடுத்து, உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

'சுங்க கட்டண வசூலை நிறுத்த வேண்டும்'

தரமற்ற சாலை குறித்து, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் கூறியதாவது:சிதம்பரம்- மீன்சுருட்டி சாலை முறையாக திட்டமிட்டு போடப்படவில்லை. இருசக்கர வாகனத்தில் சென்றாலே, சாலையில் மேடு பள்ளங்கள் இருப்பதால் துள்ளுகிறது. இதனால் தோள்பட்டை மற்றும் கைகளில் வலி ஏற்படுகிறது. மேலும் காரில் பயத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது. தரமற்ற சாலையை போட்டுவிட்டு, சுங்க கட்டணம் வசூலை துவக்கி விட்டனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சருக்கு புகார் தெரிவித்துள்ளோம். 'நகாய்' அதிகாரிகள் அலட்சியம், ஒப்பந்ததாரரின் அவசரகதியில் வேலை ஆகியன பொதுமக்களை பலி வாங்கி வருகிறது. எனவே, சாலையை சரி செய்து தர வேண்டும். அதுவரையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ