ஆக்கிரமிப்பு அகற்றம் பள்ளி சென்ற குழந்தைகள்
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் இருந்த ஆக்கிரமிப்பை வருவாய்த்துறை அகற்றியதால், பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சாத்தாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரசு இட தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆக்கிரமிப்பு அகற்ற அரசு உத்தரவிட்டும் அகற்றப்படாததால், நேற்று முன்தினம், ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றக்கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் மற்றும் மா.கம்யூ., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.இது தொடர்பாக, நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார், பள்ளி வளாகத்தை பார்வையிட்டு உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, நேற்று காலை தாசில்தார் சேகர் தலைமையிலான வருவாய் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி கட்டட இடிபாடுகள் மற்றும் பொருட்களை ஸ்ரீ நெடுஞ்சேரி வி.ஏ.ஓ., அலுவலகம் கொண்டு சென்றனர். அதையடுத்து, மதியம் 12:00 மணிக்கு மேல் குழந்தைகளை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பினர்.