சிதம்பரத்திற்கு முதல்வர் வருகை; ஏற்பாட்டு பணிகள் கலெக்டர் ஆய்வு
சிதம்பரம் : சிதம்பரத்தில், வரும் 15 ம் தேதி வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் ”உங்களுடன் ஸ்டாலின்“ திட்டத்தை துவக்கி வைக்க உள்ள நிலையில், தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், வரும் 15 ம் தேதி தமிழக முதல்வர் ஸடாலின் வருகை தந்து, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். அதனையொட்டி, நகராட்சிக்குட்பட்ட சின்ன மார்க்கெட் பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்கள் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள், தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. அதனை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் கூறுகையில், சிதம்பரம் நகராட்சியில் முதற்கட்டமாக 11 வார்டுகளில் உள்ள 5900 வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக சென்று முகாம் குறித்த தகவல்கள், சேவைகள் மற்றும் தெரிவிப்பதோடு, விண்ணப்பம் மற்றும் தகவல் கையேட்டினையும் வழங்கி வருகின்றனர். வரும் 15 ம் தேதி முதல்வர் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைக்க உள்ள நிலையில், சிதம்பரம் நகராட்சி பகுதிக்கு 24 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இதுவரை 3,500 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. 13 முகாம்கள் நடைபெற உள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடலுார் மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் 130 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும் என மொத்தம் 378 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கென சுமார் 2 ஆயிரத்து 500 தன்னார்வலர்கள் ஈடுபடுட்டுள்ளனர். அதனை தொடர்ந்து முதல்வர் வருகைக்காக, முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார், நகராட்சி நிருவாக மண்டல இயக்கனர் (செங்கல்பட்டு) லட்சுமி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் மல்லிகா,தாசில்தார் கீதா உட்பட பலர் உடன் இருந்தனர்.