கடலுார் கடலில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி
கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் குளித்த கல்லுாரி மாணவர், நீரில் மூழ்கி இறந்தார். கடலுார், தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் ரகுபதி மகன் ரவி ராஜன் 20; இவர், கடலுார் கலைக் கல்லுாரியில் பி.பி.ஏ., 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரவி ராஜன், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் கோகுலசுதர்சன் உட்பட 4 பேருடன் சேர்ந்து கடலுார் சில்வர் பீச்சில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி ரவி ராஜன், கோகுல சுதர்சன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். சக நண்பர்கள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள், கடலில் மூழ்கிய 2 பேரையும் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்ததில், ரவி ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். கோகுல சுதர்சனனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின் பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.