விதிமீறி செம்மண் குவாரியில் மண் எடுப்பதாக புகார்
கடலுார் : விதிமுறை மீறி செம்மண் குவாரியில் மண் எடுப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கடலுார் மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் தலைமையில் கொடுத்துள்ள மனு;கடலுார் அடுத்த திருவந்திபுரம் கிராமத்தில் தனிநபர் ஒருவர் செம்மண் குவாரி ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இக்குவாரியில் அரசு அனுமதித்த ஆழத்தைவிட 60 அடி ஆழத்திற்கும், 10 ஏக்கர் அளவிற்கு குவாரியை சட்டவிரோதமாக விரிவுப்படுத்தி கனிம பொருட்களை கொள்ளையடித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதி விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கு மிகவும் இடையூறாக உள்ளது. இங்கிருந்து செல்லும் வாகனங்களால் விவசாய நிலத்திற்கான பாதை சேதமடைந்துள்ளது. இதேபோன்று, வெள்ளை களிமண் ஆகியவற்றை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்கின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, குவாரியில் கலெக்டர் ஆய்வு செய்து அதற்கான உரிமத்தை ரத்து செய்யவும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.