என்.எல்.சி.,யில் காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி கைது
நெய்வேலி: என்.எல்.சி., அனல் மின் நிலையத்தில் காப்பர் ஒயர் திருடிய ஒப்பந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி அடுத்துள்ள மேலக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் ராஜதுரை.27. இவர் என்.எல்.சி., இரண்டாம் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது, அனல் மின்நிலையத்தின் மெயின் கேட்டில் பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் ராஜ துரையை சோதனை செய்தனர். அப்போது, ராஜதுரை தனது உடையில் மறைத்து 2.8 கிலோ காப்பர் ஒயரை திருடி எடுத்து வந்தது தெரியவந்தது. காப்பர் ஒயரை பறிமுதல் செய்த பாதுகாப்பு படை வீரர்கள் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல் சப் இன்ஸ்பெக்டர் ஜெரினா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.