சிறுவர்களை மிரட்டி மது குடிக்க வைத்து கொடூரம்
சிதம்பரம்: சிறுவர்கள் இருவருக்கு, இளைஞர் ஒருவர் மதுவை கொடுத்து, கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் நேற்று பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ குறித்து, கடலுார் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி செந்தில் விசாரணை நடத்தினார். அதில், கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த அம்மன்கோவில் கிராமத்தில் வீடியோ எடுக்கப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில், மேலும் சில வீடியோக்கள் இருப்பதாகவும், அதில் பள்ளி சிறுவர்களை கட்டாயப்படுத்தி கை, கால்களை கட்டிப்போட்டு மதுவை வாயில் ஊற்றுவது, மற்றொரு மாணவரை அடித்து குடிக்க வைப்பது போன்ற வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.