கடலுார் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் மோகன் ஆய்வு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் மோகன் ஆய்வு செய்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி வரை தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் 9.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1200 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 8 கதவணைகள், 160 மீட்டர் நீளத்திற்கு ஆர்.சி.சி., தடுப்புச் சுவர், சரிவு சுவர், மண் திட்டுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணியின் மூலம் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை, சேட்டுமண், தட்சணாமூர்த்தி நகர், ஓம் சக்தி நகர், தென்றல் நகர், இளம்வழுதி நகர், அழகப்பா நகர், சப்தகிரி நகர், குண்டு உப்பலவாடி பகுதிகள் வெள்ளநீர் புகாமல் பாதுகாக்கப்படும். பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட மணப்பாக்கத்தில் சாலை மேம்படுத்தும் பணி 86.02 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மலட்டாற்றின் குறுக்கே 93 மீட்டர் நீலத்தில் 8.40 செ.மீ அகலத்தில் பாதுகாப்புச் சுவர் மற்றும் தடுப்புச் சுவருடன் கூடிய உயர்மட்ட பாலம் 8.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. கடலுார் கெடிலம் ஆற்றில் மேம்பாலம் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் தெரிவித்தார். ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆணையர் பிரியங்கா, கடலுார் மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர்ரகுமான், பண்ருட்டி நகராட்சி ஆணையாளர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.