கடலுார் மாவட்டத்திற்கு ரூ. 21ஆயிரம் கோடி கடன்; திறன் மதிப்பீடு: கலெக்டர் வெளியிட்டார்
கடலுார் : கடலுார் மாவட்டத்திற்கு 2025-26 நிதியாண்டில், தயாரிக்கப்பட்டுள்ள ரூ. 21 ஆயிரத்து 69 கோடி கடன் திறன் மதிப்பீடு ஆவணத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இது தொடர்பான கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:கடலுார் மாவட்டத்திற்கு 2025-26 நிதியாண்டிற்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை, நபார்டு கணித்து வெளியிட்டுள்ளது. இது நடப்பு கடன் திட்டத்துடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிகமாகும். பல்வேறு அரசு உதவி திட்டங்களின் கீழ் கடன்களை விரைவாக அங்கீகரிக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக வேளாண் துறையில் நடுத்தர மற்றும் நீண்டகால கடன்களுக்கான முக்கியத்துவத்தை வங்கிகள் கொடுக்க வேண்டும்.மேலும், மாவட்டத்தில் விவசாய இயந்திரமயமாக்கல், சிறுதுளி பாசன அமைப்புகள் மற்றும் கால்நடை வளர்ச்சிக்கு பெருமளவுவாய்ப்புகள் வழங்க வேண்டும்.வேளாண் துறை மூலம் 16 ஆயிரத்து 176 கோடி ரூபாய் எம்.எஸ்.எம்.இ., துறை மூலம் 2 ஆயிரத்து 622 கோடி ரூபாய் மற்ற முக்கியத் துறைகள் மூலம்2 ஆயிரத்து 271 கோடி எனவும,் துறை வாரியாக கடன் திறன்கள் கணிக்கப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்திற்கு அதிகரிக்கப்பட்ட கடன் திறனின் மூலம், மாவட்டத்தில் விவசாய வளர்ச்சி, சிறு மற்றும் மத்திய அளவிலான தொழில் முனைவோரின் முன்னேற்றம் மற்றும் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.இவ்வாறு கலெக்டர் கூறினார்.கூட்டத்தில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரிசங்கர் ராவ், ஆர்.பி.ஐ., உதவி தலைமை மேலாளர் ஸ்ரீதர், நபார்டு உதவிதலைமை மேலாளர் சித்தார்த்தன், முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.