இரவு நேர பாராக மாறும் கடலுார் சுற்றுலா மாளிகை
கடலுார் சுற்றுலா மாளிகை கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது. இதில் முதல்வர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், ஐகோர்ட் நீதிபதிகள் வந்து தங்குவதற்காக 'சூட்' கள் உள்ளன. இதில் பணிபுரியும் சில அதிகாரிகள் தங்களது வேலைகளை சில எடுபிடிகளிடம் ஒப்படைத்துவிட்டு 'ஹாயாக' சென்று விடுகின்றனர். இங்குள்ள கடை நிலை ஊழியர்கள் எடுபிடிகளிடம் கூட்டு சேர்ந்து சுற்றுலா மாளிகையை தங்கள் வீடுகள் போல பயன்படுத்தி வருகினறனர். குறிப்பாக, பகலில் அறைக்குள்ளேயே உணவு சாப்பிடுவது, இரவு மது அருந்துவது, அங்கேயே துாங்குவது என அனைத்து பணிகளையும் சுற்றுலா மாளிகையிலேயே முடித்துக் கொள்கின்றனர். இதை பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தாமுண்டு, தம் வேலையுண்டு என போய்க் கொண்டிருக்கின்றனர். இதனால் விரைவில் சுற்றுலா மாளிகை இரவு நேர 'பாராக' மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே அதிகாரிகள் இனிமேலாவது சுற்றுலா மாளிகைக்கு தொடர்பு இல்லாதவர்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை பார்த்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சுற்றுலா 'மாளிகை' யாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.