வலையில் சிக்கி மான் பலி
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே தனியார் கம்பெனியின் சுற்று பகுதியில் கட்டியிருந்த வலையில் சிக்கி ஆண் மான் இறந்தது.கடலுார் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த புத்திரவல்லி பகுதியில் என்.ஓ.சி.எல்., தனியார் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியை சுற்றி பாதுகாப்பிற்காக மீன் வலை கட்டப்பட்டுள்ளது. நேற்று இந்த வலையில் மூன்றரை வயதுடைய ஆண் மான் ஒன்று சிக்கி இறந்து கிடந்தது. தகவலறிந்த கடலுார் வனத்துறை அதிகாரி தணிகாசலம் நேரில் சென்று உடலைக்கைப்பற்றி மான் இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவர் நரேந்திரன் மானின் உடலை பரிசோதனை செய்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.