கோவில் சொத்தை அபகரிக்கும் துறை அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில் நடந்த ஆரத்தி விழாவில் பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டார். அங்கு அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்துாணில் 1000 ஆண்டுகளுக்கு மேல் தீபம் ஏற்றி வந்தனர். கடந்த 90 ஆண்டுகளாக தான் அங்கு தீபம் ஏற்றவில்லை. முருக பக்தர்கள் தொடர்ந்து அங்கு தீபம் ஏற்ற போராடி வருகிறோம். சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் நடந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். கோர்ட்டில் தமிழக அரசு அது அளவைக்கல் என கூறவில்லை. இந்த தீர்ப்புக்கு பிறகே, தீபத்துாண் அல்ல. அது அளவைக்கல் என கூறு கின்றனர். தற்போது அதையும் மாற்றி சமணர்களின் தீபத்துாண் என கூறுகின்றனர். சமணர்களுக்கு இரவில் விளக்கேற்றும் வழக்கமில்லை. தொடர்ந்து தமிழக அரசு பொய்யான தகவல்களை சொல்லி வருகிறது. விரைவில் முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடையும்படி தீர்ப்பு வரும். தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும். தமிழக அறநிலையத்துறை கோவில் சொத்துகளை அபகரிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.