உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அஞ்சல் துறையில் ஆதார் பதிவு முகாம் நடத்த தயார்: நடப்பு நிதியாண்டில் 40,500 பேர் இதுவரை பதிவு

அஞ்சல் துறையில் ஆதார் பதிவு முகாம் நடத்த தயார்: நடப்பு நிதியாண்டில் 40,500 பேர் இதுவரை பதிவு

கடலுார்: கடலுார் அஞ்சல் கோட்டத்தில் நடந்த முகாம்களில், கடந்த நிதியாண்டில் 71,000 பேர் மற்றும் நடப்பு நிதியாண்டில் இதுவரை 40,500 பேர் ஆதார் புதுப்பித்தல் மற்றும் புதிதாக பதிவு செய்துள்ளனர்.இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாது, நாட்டு மக்கள் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகள், பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான ஆவணமாக திகழ்கிறது.பல்வேறு நலத்திட்ட உதவிகள் சேவைகளை பெறுவதற்கு தனிமனித அடையாளமாக திகழ்வது ஆதார் அட்டை. கண் கருவிழி, கைரேகை, பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அதில் அடங்கி உள்ளதால் போலிகளை தவிர்த்து தகுதி வாய்ந்த நபர்கள் பயனடைய முடிகிறது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் புதுப்பித்துக்கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள், கைரேகையை புதிதாக பதிவு செய்யலாம்.ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க நாளை 15ம் தேதி கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, டிச., 14ம் தேதி வரை மேலும் மூன்று மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலுார் அஞ்சல் கோட்டத்தில் 40 ஆதார் மையங்களில் ஆதார் அட்டை புதியதாக பதிவு செய்ய மற்றும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் கடந்த 2023-24ம் நிதியாண்டில் 71,000 பேர் மற்றும் நடப்பு 2024-25ம் நிதியாண்டில் இது நாள் வரை 40,500 பேர் ஆதார் புதுப்பித்தல் மற்றும் புதியதாக பதிவு செய்துள்ளனர். அஞ்சல் கோட்டத்தில் இந்த நிதியாண்டில் 40 முகாம்களும், கடந்த நிதியாண்டில் 166 முகாம் நடத்தியுள்ளனர். இதேபோன்று, நுாறு பதிவுகள் இருக்கும் பகுதிகளில் அசோசியேஷன்ஸ், பள்ளிகள், குடியிருப்போர் நல சங்கங்கள் ஆதார் முகாம் தங்கள் பகுதியில் நடத்த வேண்டும் என கேட்டால், கடலுார் அஞ்சல் கேட்டம் மூலம் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை