கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் ரூ.15.08 கோடி செலவில் ஓடுதளம் துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
கடலுார்; ''கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில், ரூ.15.08 கோடியில் செயற்கை இழையினால் ஆன தடகள ஓடுதளம் அமைக்கப்படும்'' என, துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார்.கடலுாரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது;திராவிட மாடல் அரசு என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் அர்த்தம். எல்லோருக்கும் எல்லா நலத்திட்டங்களும் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.இதுவரை 30 மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. கருணாநிதி பெயரில் முதல் விளையாட்டு திட்டம் இது.கருணாநிதியிடம் உள்ள விடாமுயற்சி, திட்டமிடல், மன உறுதி ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் என பெயர் வைக்கப்பட்டது. சர்வதேச அளவிலான கால்பந்து போட்டியில் கடலுாரை சேர்ந்த இரண்டு பெண்கள் சாதனை படைத்துள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள பெண்களுக்கு ரோல் மாடலாக இவர்கள் உள்ளனர்.தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தின் மூலம் 17 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 21 ஆயிரம் மாணவர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுகின்றனர். காலை உணவு திட்டத்தின் மூலம் 58 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.கடலுார் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.20 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 15.08 கோடி செலவில் செயற்கை இழையினால் ஆன தடகள ஓடுதளம் அமைக்கப்படும். விருத்தாசலத்தில் உள்ள மினி மைதா னம் 15 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.உழைப்புக்கு பெயர் பெற்ற கடலுார் மக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 5 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.துணை முதல்வர் உதயநிதி பேசினார்.