முற்றுகை போராட்டம் மாற்றுத்திறனாளிகள் கைது
கடலுார்: கடலுாரில் முற்றுகை போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. இதில், ஆந்திராவில் மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தின் தன்மையை பொறுத்து 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மாதாந்திர உதவித்தொகை வழங்குவதை போன்று, தமிழக அரசும் உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆளவந்தார், துணைத்தலைவர்கள் ராசையன், அப்துல் அமீது, இணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், வசந்தி உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, 130 பேரை புதுநகர் போலீசார் கைது செய்தனர்.